போலீசார் வைத்த பேரிகார்டுகள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
கடலுார் : கடலுார் உழவர் சந்தை எதிரில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண போலீசார் அமைத்த பேரிகார்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கடலுார் உழவர் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தும் நிலை நீடித்து வருகிறது.
இதேபோன்று, உழவர் சந்தை எதிரில், நடைபாதை வியாபாரிகள், சாலையோரத்தில் கடைகள் வைத்திருந்தனர்.
இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இங்கு நெரிசலை தவிர்க்க, தடுப்பு அமைக்க போக்குவரத்து போலீசாருக்கு, எஸ்.பி., அறிவுறுத்தினார்.
இதையடுத்து, கடந்த ஜூலை மாதம், உழவர் சந்தை முன் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்தும், நடைபாதை வியாபாரிகள் சாலைக்கு வராமல் தடுத்தும், பேரிகார்டுகளை போலீசார் வைத்தனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், இந்த பேரிகார்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், பேரிகார்டு பகுதியில் வியாபாரிகள் யாரும் விற்பனை செய்வதில்லை. சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அங்கு குப்பைகள் மட்டுமே கொட்டப்படுவதால் பேரிகார்டுகளை அகற்றியதாக கூறினர்.