விழுப்புரம் மாவட்ட கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு வந்தவரை, ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
இச்சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டது.
அதன்படி, அனைத்து நீதிமன்றங்களிலும், எஸ்.ஐ., தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவும், அச்சுறுத்தலின் போது துப்பாக்கியை பயன்படுத்தவும் டி.ஜி.பி., உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே 10 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தனர். இந்நிலையில், தற்போது கூடுதலாக துப்பாக்கி ஏந்திய ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.