ஒரே படகில் பன்ட், ஜெய்ஸ்வால், கில்... * இளம் படை மீது ரோகித் நம்பிக்கை

மெல்போர்ன்: ''ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட், சுப்மன் கில்லுக்கு அதிக 'அட்வைஸ்' தேவையில்லை. இவர்களது திறமை மீது நம்பிக்கை உண்டு,'' என ரோகித் சர்மா தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) நாளை மெல்போர்னில் துவங்குகிறது.
இத்தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் தடுமாறுகின்றனர். பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 161 ரன் விளாசிய ஜெய்ஸ்வால், அதற்கு பின் சோபிக்கவில்லை. சுப்மன் கில், ரிஷாப் பன்ட் ஏமாற்றுகின்றனர்.
இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''மூவரும் ஒரே படகில் தான் பயணிக்கின்றனர். அதிக ஆலோசனை கூறி, இவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. தங்களது திறமை பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்களிடம் அணி என்ன எதிர்பார்க்கிறது என்பது பற்றித் தெரியும்.
முதல் அனுபவம்
ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஆஸ்திரேலியா வந்துள்ளார். சதம் விளாசி திறமையை நிரூபித்தார். இவரது இயல்பான ஆட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டும். தற்காப்பு, தாக்குதல் பாணியில் ஆடுவதில் வல்லவர். சிறிது நேரம் தாக்குப்பிடித்தால், ஆபத்தான வீரராக உருவெடுத்து விடுவார்.
உலகத் தரமான வீரர் சுப்மன் கில். தனது பேட்டிங்கின் பலம், பலவீனம் தெரியும். பெரிய ஸ்கோர் எட்டும் ரகசியம் அறிந்தவர். வரும் போட்டிகளில் அதிக ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று போட்டிகளை வைத்து ரிஷாப் திறமையை மதிப்பீடு செய்யக் கூடாது.
சிறந்த 'அட்வைஸ்'
இத்தொடரில் பும்ரா மிரட்டுகிறார். இவருக்கு 'அட்வைஸ்' செய்யாமல் இருப்பது தான் சிறந்த 'அட்வைஸ்'. விக்கெட் வீழ்த்த தவறினாலும் கூட, எப்போதும் தெளிவான மனநிலையில் இருப்பார்,''என்றார்.

நலமாக இருக்கிறேன்
மெல்போர்னில், வலை பயிற்சியில் ஈடுபட்ட போது ரோகித் சர்மாவின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. கடந்த 3 இன்னிங்சில் (10, 3, 6) 6வது இடத்தில் களமிறங்கி சோபிக்கவில்லை. மீண்டும் துவக்க வீரராக வருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது பற்றி ரோகித் கூறுகையில்,''முழங்காலில் எவ்வித பிரச்னையும் இல்லை. நலமாக இருக்கிறேன். நான்காவது டெஸ்டில் விளையாடுவேன். பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களமிறங்குவேன் என்பதை கூற முடியாது. அணியின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும்,''என்றார்.

கோலி எப்படி
மூன்று டெஸ்டில் கோலி, 126 ரன் (5, 100, 7, 11, 3,) தான் எடுத்துள்ளார். நேற்று ரோகித் உடன் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார். 'ஆப்-ஸ்டம்ப்பில்' இருந்து விலகிச் செல்லும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார் கோலி. இதற்காக, 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' 6 'இன்ச்' வெளியே கற்பனையான நான்காவது 'ஸ்டம்ப்' அளவில் பிரசித் கிருஷ்ணாவை பந்துவீச சொல்லி பயிற்சி மேற்கொண்டார்.
ரோகித் சர்மா கூறுகையில்,''நவீன கிரிக்கெட்டின் மகத்தான வீரர் கோலி. மீண்டு வருவதற்கான வழியை அவரே கண்டுபிடித்துவிடுவார்,''என்றார்.

முதல் மரியாதை
ரிஷாப் பன்ட் கடந்த மூன்று டெஸ்டில் (37, 1, 21, 28, 9) ஏமாற்றினார். இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''ரிஷாப் அவசரப்படக்கூடாது. களமிறங்கிய முதல் அரை மணி நேரத்திற்கு, எதிரணி பவுலர்களுக்கு மரியாதை கொடுத்து அடக்கி வாசிக்க வேண்டும். ஒருவேளை இந்தியா 525/3 ரன் என வலுவாக இருந்தால், தனது விளாசல் ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்,'' என்றார்.

Advertisement