டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பண்ருட்டி அருகே மறியல்

பண்ருட்டி; பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புலவனுார் ஊராட்சி, ராசாப்பாளையம் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடை கோர்ட் உத்தரவுப்படி முடப்பட்டது.

அந்த கடையை, பணப்பாக்கம் செல்லும் சாலையில் 300 மீட்டர் தொலைவில் அமைக்க கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள், வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலையில் பணப்பாக்கம் மெயின் ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் காலை 11:00 மணி முதல் 11:30 வரை வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.

Advertisement