வங்கதேசத்தவருக்கு போலி ஆதார்: 11 பேர் கும்பல் கைது

2

புதுடில்லி :வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வருவோருக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த, 11 பேர் கும்பலை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து பலர் சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் ஊடுருவுவது பெரும் பிரச்னையாக உள்ளது.

டில்லியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவர் குறித்து ஆய்வு செய்ய, தலைமைச் செயலர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு, துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனைகளில், 1,000க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே, சங்கம் விகார் பகுதியில் சமீபத்தில் சேடன் ஷேக் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஏற்பாடு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவருடைய கூட்டாளிகள் தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கினர்.

இது தொடர்பாக ஐந்து வங்கதேசத்தவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவுபவர்களுக்கு, இந்த கும்பல் உதவி செய்து வந்துள்ளது. காடுகள் வழியாகவும், ரயில்கள் வாயிலாகவும் அவர்கள் நம் நாட்டுக்குள் அழைத்து வரப்பட்டுஉள்ளனர்.

ஜனதா பிரிண்ட்ஸ் என்ற பெயரில் உள்ள ஒரு போலி இணையதளம் வாயிலாக, இதுபோன்று சட்டவிரோதமாக வந்தவர்களுக்கு, ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை போலியாக தயாரித்து கொடுத்துள்ளனர். ஒரு அடையாள அட்டைக்கு, 20 ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, பல போலி ஆதார் அட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த போலி வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி, தேர்தலில் ஓட்டளிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement