பனிப்பொழிவில் சிக்கிய 1,000 வாகனங்கள்

மணாலி : ஹிமாச்சல் பிரதேச மாநிலம், மணாலி அருகே சாலையை மறைக்கும் அளவுக்கு ஏற்பட்ட கடும் பனிப்பொழிவினால், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி தவித்தன.

ஹிமாச்சல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு அதிகம் இருக்கும். தற்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மணாலியில் சுற்றுலா பயணியரின் கூட்டம் அதிகரித்துள்ளது.

இங்கு நேற்று கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் மணாலியை இணைக்கும் முக்கிய சாலைகளில் பனி படர்ந்து, வாகனங்கள் செல்வது சிரமமாகியது.

அடல் சுரங்கத்தில் இருந்து சோலாங் பள்ளத்தாக்கு வரையிலான கொண்டை ஊசி வளைவு சாலைகளில் பனியால் வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன. இதனால், அடுத்தடுத்து வந்த 1,000 வண்டிகள் வாகன நெரிசலில் சிக்கின.

பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை நிறுவனத்தின் வீரர்கள், இரவு வரை போராடி சாலைகளில் படர்ந்து இருந்த பனியை அகற்றினர். இதையடுத்து பல மணி நேர காத்திருப்புக்கு பின் சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்களின் வாகனங்கள் மணாலியை அடைந்தன.

Advertisement