வன்னியர்களுக்கு உருவாகிறது புதிய கட்சி!
ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, “பொது பாதையை ஆக்கிரமிச்சிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி. “திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலம், சூரியன் நகர் பகுதியில், மின்வாரியம் சார்புல தனியார் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்கி, 'டிரான்ஸ்பார்மர்' பொருத்தினாங்க... இந்த டிரான்ஸ்பார்மரை அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு போகும் பொது பாதையில அமைச்சு, சுத்தி கம்பி வேலி போட்டிருக்காங்க பா...
“அதன் நுழைவாயிலை பொது இடத்தில் கட்டியதும் இல்லாம, ஓடை புறம்போக்கு இடத்தில் வாகன ஷெட்டும் அமைச்சிருக்காங்க... சமூக ஆர்வலர்கள் புகார்கள் தெரிவிக்கவே, வருவாய் துறையினர் வந்து ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை உறுதி பண்ணிட்டு போனாங்க... ஆனாலும், மின் வாரியம், வருவாய் துறை, மாநகராட்சி உட்பட எந்த துறை அதிகாரிகளும் இதை அகற்ற நடவடிக்கை எடுக்கல பா...” என்றார், அன்வர்பாய்.
“புகார் கடிதங்களை பதுக்கிடறாங்க ஓய்...” என்றார், குப்பண்ணா. “எந்த துறையில வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழகம் முழுக்கவே பத்திரப்பதிவு தொடர்பான புகார்களை மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை டி.ஐ.ஜி.,க்கள் தான் விசாரிப்பா... ஆனா, சில மேல் முறையீடுகளுக்கு சென்னை, சாந்தோம்ல இருக்கற பதிவுத்துறை ஐ.ஜி., ஆபீசுக்கு தான் போகணும் ஓய்...
“பொதுமக்களின் புகார் மட்டுமில்லாம, சார் - பதிவாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கோரிக்கை மனுக்களும் இங்க தான் போகும்... இப்படி வர்ற கடிதங்களை முறைப்படி, வரிசைப்படுத்தி ஐ.ஜி., பார்வைக்கு வைக்கணும் ஓய்... “இந்த பணிகளை எல்லாம், ஐ.ஜி.,யின் நேர்முக உதவியாளரா இருக்கற கூடுதல் ஐ.ஜி., தான் செய்யணும்... 'இப்ப, இந்த பதவியில் இருக்கற பெண் அதிகாரி, பெரும்பாலான கடிதங்கள், கோரிக்கை மனுக்களை பதுக்கிடறாங்க... ஐ.ஜி., பார்வைக்கு எடுத்துண்டு போறதில்ல'ன்னு பதிவுத்துறை ஊழியர்கள் புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“வன்னியர்களுக்கு புது கட்சி துவங்க போறாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “பா.ம.க.,வின் ஒரு பிரிவான வன்னியர் சங்கத்தின் தலைவரா இருந்த காடுவெட்டி குரு காலமாகிட்டாரே... இவரது மகள் விருதாம்பிகையும், இவங்க கணவரும் பா.ம.க.,வுக்கு எதிரா செயல்படுறாங்க... “சமீபத்துல இந்த தம்பதி, குருவின் தீவிர ஆதரவாளர்களை அழைச்சு ஆலோசனை நடத்தியிருக்காங்க...
இதுல, 'வட மாவட்டங்கள்ல 70 தொகுதியில வன்னியர் சமுதாயத்தினர் அடர்த்தியா வசிக்கிறாங்க... அதனால, இந்த தொகுதிகள்லயாவது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தணும்'னு வலியுறுத்த முடிவு பண்ணியிருக்காங்க... “பொங்கல் முடிஞ்சதும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்த 70 தொகுதிகள்ல பாதயாத்திரை நடத்தவும் முடிவு பண்ணியிருக்காங்க...
''தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - காங்., - பா.ஜ., - தே.மு.தி.க., - த.வெ.க., ஆகிய கட்சிகள்ல எந்த பதவியும் இல்லாம, அடிமட்ட தொண்டர்களா இருக்கிற வன்னியர் சமுதாயத்தினரை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, தனியா ஒரு கட்சி துவங்கி, தேர்தலை சந்திக்கவும், 'பிளான்' பண்ணியிருக்காங்க...” என முடித்தார், அந்தோணிசாமி. அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.