அரையிறுதியில் தமிழக அணி * கூச் பெஹர் டிராபியில்...
தேனி: கூச் பெஹர் டிராபி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கூச் பெஹர் டிராபி (4 நாள் போட்டி) தொடர் நடத்தப்படுகிறது. தேனியில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) அகாடமி மைதானத்தில் நடந்த காலிறுதியில் தமிழகம், பஞ்சாப் அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் தமிழகம் 281, பஞ்சாப் 193 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 171/6 ரன் எடுத்து, 259 ரன் முன்னிலை பெற்றிருந்தது. அபினவ் (76), பிரவின் (55) அவுட்டாகாமல் இருந்தனர்.
அபினவ் சதம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பிரவின் 77 ரன் எடுத்து அவுட்டானார். அபினவ் 181 பந்தில் 165 ரன் குவித்தார். தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 310/10 ரன் எடுத்தது.
பின் 398 ரன் எடுத்தால் வெற்றி என பஞ்சாப் களமிறங்கியது. கேப்டன் விஹான், பார்வ்ஜோத் தலா 20 ரன் எடுத்தனர். அம்ரித்பால் சிங் (61), கார்வ் குமார் (56) அரைசதம் அடித்து ஆறுதல் தந்தனர். பஞ்சாப் அணி இரண்டாவது இன்னிங்சில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹேம்சுதேசன் 4, பிரவின் 3 விக்கெட் வீழ்த்தினர். 201 ரன்னில் வெற்றி பெற்ற தமிழக அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.