சிறு சிறு கோர்வைகளில் அசத்திய அய்யர் சகோதரிகள்
பட்டணம் சுப்பிரமணிய அய்யரால் இயற்றப்பட்ட 'நின்னு செப்பக' எனும் கிருதியில், தங்கள் கச்சேரியை, ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ஆரம்பித்தனர் அய்யர் சகோதரிகள் எனும் சுதா - ஸ்ரீ வித்யா.
தன் கர்ம வினைகளால் சங்கடம் அடைந்த மானிட மனம், அதை உணர்ந்து, இதில் வெங்கடேசனை குறைகூற என்ன இருக்கிறது என்பதை கூறும் இந்த கூற்றை, அனைவரும் ரசிக்கும் வகையில் பாடி அசத்தினர்.
மந்தாரி ராகத்தில் அமையப்பெற்ற இக்கிருதியில், நிரவல் பாடி சிறப்பு செய்தனர். பின் 'ஏலா தெளியலேரோ பூர்வ' எனும் தர்பார் ராகத்தில் அமையப்பெற்ற கிருதியை, தகுந்த ஸ்வர ப்ரயோகங்களால், ராக ஆலாபனையாக ஆரம்பித்தார் ஸ்ரீ வித்யா.
அதை, தன் வயலினில் இசைத்து, ஸ்ரீகாந்த் ரசிக்க வைத்தார். 'பிறையின் திருவருளே, சிவனே உன்னை வணங்குகின்றேன்' என்ற, பல பொருட்களை உள்ளடக்கிய இக்கிருதியை, மிஸ்ர சாபு தாளத்தில் பாடி, இருவரும் சிவனுக்கு மாலைத்தொடுத்தனர்.
ரவிசந்திரிகா ராகத்தில், சிட்டை ஸ்வரங்களுடன் அமைந்த ஆதி தாள கிருதியை, மேலும் கற்பனை ஸ்வரங்களை சிறு சிறு கோர்வைகளுடன் மேம்படுத்தி, குரலிசையால் சபையில் இசைத்தனர்.
கச்சேரியின் மைய உருப்படியாக, முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய 'நீரஜாக்ஷி காமாட்சி' எனும் இந்தோள ராக கிருதியை, ராக ஆலாப்பனையுடன், சுதா ஆரம்பிக்க, பின் வயலின் இசையும் அமைய, ரெட்டை களை ரூபக தாளத்தில் தொடர்ந்தனர்.
சிட்டை ஸ்வரங்களுடன் பாடி, பின் இரு காலப்பிரமாணங்களில் நிரவலையும், கற்பனை ஸ்வரங்களையும் வழங்கியது மட்டுமல்லாது, கற்பனை ஸ்வரங்களில் கிரக பேத முறையை கையாண்டனர்.
மோஹனம், மத்யமாவதி, சுத்த சாவேரி மற்றும் சுத்த தன்யாசி போன்ற ராகங்களை கிரக பேதத்தில் பயன்படுத்தினர்.
பின், மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் சமர்ப்பித்தார் ஆதம்பாக்கம் அரவிந்த். ஹமிர்கல்யாணி மற்றும் சிந்துபைரவியில் விருத்தம் பாடி, முருகப்பெருமானை வரச்சொல்லி தோழியிடம் தலைவி சொல்லும், 'கண்டு நீ சொல்ல வேண்டும்' எனும் சிந்துபைரவி ராக பதத்தை பாடி, கச்சேரியை செவ்வனே முடித்தனர்.
-ரா.பிரியங்கா