ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா: கோவில் நடையடைப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்ததால் கோயில் நடையடைக்கப்பட்டது.

நேற்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:30 முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜையும் நடந்தது. பின் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகினர்.

கோயில் நான்கு ரத வீதி, திட்டக்குடி வர்த்தகன் தெரு, மேலத்தெரு வழியாக சுவாமி, அம்மன் வீதி உலா சென்று ஜீவராசிகளுக்கு படியளத்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் ஜீவராசிகள் உட்கொள்ள வாசலில் அரிசி, நவதானியங்களை துாவி சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.

பின் மதியம் 12:30 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு சென்றனர். இதனால் காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது.

--

Advertisement