கண் பார்வை பாதிப்பு குழந்தைகளுக்கு அதிகரிப்பு
சென்னை, சென்னை ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தி.நகர், அமெரிக்காவின் 'கின்டர் ஐ' ஆகியவை இணைந்து, 1,000 குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
நிகழ்வில், மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன் பேசியதாவது:
பள்ளி குழந்தைகளிடம் கிட்டப்பார்வை, துாரப்பார்வை பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களில், 8.4 சதவீதம் பேர் கிட்டபார்வையாலும், 6 சதவீதம் பேர் துாரப்பார்வையாலும், 4 சதவீதம் பேர் பார்வை மங்கலாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த, 2015ம் ஆண்டு, 4 லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 6 சதவீதம் பேர் கிட்டப்பார்வை, துாரப்பார்வையால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
கொரோனா காலத்தில், டேப், கணினி, மொபைல் போன் உள்ளிட்ட பயன்பாடு அதிகரிப்பால், 20 சதவீதத்துக்கு மேல் குழந்தைகள் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிக பாதிப்பு காணப்படும் நிலையில், அதற்கு நிகராக இந்தியாவும் நெருங்கி வருகிறது.
குழந்தைகளிடம் ஏற்படும் இப்பிரச்னைகளுக்கு மூக்கு கண்ணாடி அணிதல், மருந்து பயன்படுத்துதல் அவசியம். அலட்சியம் காட்டினால், விழித்திரை பாதிப்பு ஏற்பட்டு, பார்வையிழப்பு ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு கீரை, மீன், முட்டை உள்ளிட்ட உணவுகளை, அவ்வப்போது கொடுப்பது அவசியம்.
மேலும், வீடுகளிலேயே முடங்க விடாமல், வெயில் படும்படி வெளியே விளையாடஅனுமதிப்பதும் அவசியம். அப்போதுதான், கண் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.