சேலம் விமான நிலைய விரிவாக்கம் கையில் கறுப்பு கொடியுடன் மக்கள் எதிர்ப்பு

ஓமலுார்:விமான நிலைய விரிவாக்கத்துக்கு, நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன், கறுப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து, 570 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெறுகிறது. நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என, நான்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று விமான நிலையம் அருகே உள்ள சிக்கனம்பட்டியில், நில எடுப்பு அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்ய வந்தனர். அப்போது கிராம மக்கள் கறுப்பு கொடியை கையில் ஏந்தி, அதிகாரிகள் முன்னிலையில் வந்து, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம், நீங்கள் ஏன் நிலத்தை அளவீடு செய்கிறீர்கள் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அதிகாரிகள், அரசு பணியை நாங்கள் செய்து வருகிறோம் என தெரிவித்து, போலீசார் பாதுகாப்புடன் நில அளவீடு பணியை மேற்கொண்டு, பின் புறப்பட்டு சென்றனர்.

---

Advertisement