ஜி.என்.டி., சாலையில் தடுப்புகள் மாயம் நெடுஞ்சாலை துறையினர் அதிர்ச்சி

சென்னை, பாரிமுனை- மாதவரம் ரவுன்டானா இடையிலான ஜி.என்.டி., சாலை வடசென்னை போக்குவரத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இச்சாலை வழியாக வடசென்னை வாசிகள் மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்ட மக்களும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அலுவல், தொழில் காரணமாக வந்து செல்கின்றனர்.

இச்சாலையில், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள் வாயிலாக வியாபாரம் நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி, மின்சார அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகள், சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விபத்துகள் அதிகரித்து வந்தது.

எனவே, பாதசாரிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டைல்ஸ் கற்கள் பயன்படுத்தி நடைபாதை அமைக்கப்பட்டது.

வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரி முதல் மூலக்கடை வரை சாலையின் இரு புறங்களிலும், நடைபாதையை மறைத்து, மஞ்சள் நிறத்தில் 20 கோடி ரூபாயில் இரும்பு சாலை தடுப்புகள், கடந்தாண்டு அமைக்கப்பட்டன.

இது வர்த்தக நிறுவனங்கள், புதிதாக கடைகளை கட்டுபவர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு இடையூறாக உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் கடைகளின் முன் அழகை மறைப்பதாக வியாபாரிகள் கருதுகின்றனர். எனவே, இரவு நேரங்களில், அவற்றை அகற்றி வருகின்றனர். இதனால், பல இடங்களில் இரும்பு சாலை தடுப்புகள் மாயாகி வருகின்றன. இது நெடுஞ்சாலைத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

Advertisement