கோலிக்கு தடை விதிக்க வாய்ப்பா? ஆஸி., இளம் வீரருடன் மோதல்; ஐ.சி.சி., விதி சொல்வது என்ன?

8


மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இளம் வீரருடன் மோதலில் ஈடுபட்ட இந்திய வீரர் கோலி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்து வருகிறது.


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதன்படி, அந்த அணிக்கு கவாஜாவுடன் தொடக்க வீரராக 19 வயதான இளம்வீரர் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார். இது அவரது அறிமுகப் போட்டியாகும்.


சர்வதேச போட்டிகளில் அனுபவமில்லாத கான்ஸ்டாஸ் இந்திய அணியின் பந்துவீச்சை மிகவும் நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார். இதனால், அவர் தனது முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார். மேலும், நம்பர் ஒன் வீரரான பும்ராவின் பந்தை சிக்சருக்கு அடித்து அசத்தினார். இதன்மூலம், 2021க்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்தில் முதல் சிக்சரை அடித்த வீரர் என்ற பெருமையை கான்ஸ்டாஸ் பெற்றார்.


இந்த சமயத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலி, கான்ஸ்டாஸ் வேண்டுமென்றே மோதி, அவரை வம்புக்கு இழுத்தார். அப்போது, வர்ணனையாளராக இருந்த முன்னாள் ஆஸி., வீரர் ரிக்கி பாண்டிங், கோலி வேண்டுமென்றே இதனை செய்ததாக குற்றம்சாட்டினார். கோலியின் இந்த செயலால் ஆட்டம் பரபரப்பானதாகவே காணப்பட்டது.


இந்த நிலையில், கோலியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் ஆஸி., ரசிகர்கள், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மெல்போர்ன் கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி, ஒரு வீரர் எதிரணி வீரருடன் உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுவது லெவல் 2 குற்றமாகும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் வீரருக்கு 3 முதல் 4 நன்னடத்தை புள்ளிகள் குறைக்கப்படும். இது 24 மாதங்கள் சம்பந்தப்பட்ட வீரரின் கணக்கில் வைக்கப்படும். 4 புள்ளிகள் குறைக்கப்பட்டால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். அப்படியில்லையெனில், 50 அல்லது 100 சதவீதம் போட்டி கட்டணம் அபராதம் விதிக்கப்படும்.


இந்த விவகாரத்தில் நடுவரின் முடிவே இறுதியானது என்பதால், கோலி மீதான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற அச்சம் இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநேகமாக, கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடையோ அல்லது அபராதமோ விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.


கோலி 2019க்குப் பிறகு இதுவரையில் ஒரு நன்னடத்தை புள்ளிகள் ஏதும் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அபராதம் விதிப்பு

'பாக்ஸிங் டே' டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸி., இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ்வுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய வீரர் விராட் கோலிக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement