திடீர் சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு உள்ளூர் வியாபாரிகள் மறியல்; கடையடைப்பு

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் பகுதியில், கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வெளி மாவட்டத்தை சேர்ந்த தற்காலிக கடை வைத்து நடத்தபவர்கள், திருமண மண்டபங்கள், மற்றும் சாலையோரங்களில் டென்ட் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால், உள்ளூர் வியாபாரிகள், வியாபாரம் பாதிக்கப்படுவதாக, தற்காலிக கடை உரிமையாளர்களிடம் கடையை காலி செய்யுமாறு வலியுறுத்தினர். இந்நிலையில் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குணசீலன், தற்காலிக கடை உரிமையாளருக்கு ஆதரவாக பேசினார். இதில், ஆத்திரமடைந்த உள்ளூர் வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

கைது செய்தவர்களை விடுவிக்க கோரி, உள்ளூர் வியாபாரிகள் திடீரென நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி அளவில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, வீதிகளில் பேரணியாக சென்று போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர், கைது செய்யப்பட்ட வியாபாரிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும், செய்யாறு டவுன் போலீசார் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் வெளியூர் வியாபாரிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement