மன்மோகன் சிங் போன்ற தலைவரை பெற்றதில் பெருமை: சோனியா

15

புதுடில்லி: மன்மோகன் சிங் போன்ற தலைவரை பெற்றதில் காங்கிரஸ் கட்சியினர் என்றென்றும் பெருமையுடனும், நன்றியுடனும் இருப்பர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மன்மோகன் சிங் இழப்பால், நேர்மை மற்றும் பணிவு ஆகியவற்றின் உருவகமாக கொண்டு, நம் நாட்டிற்கு முழு மனதுடன் பணியாற்றிய ஒரு தலைவரை நாம் இழந்து விட்டோம். காங்கிரஸ் கட்சிக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டியாக இருந்தார். அவரின் இரக்கம் மற்றும் கொள்கையால், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது.

அவரது தூய்மையான இதயம் மற்றும் நல்ல மனதிற்காக நாட்டு மக்கள் அவரை மனதார விரும்பினர். அவரது அறிவுரை, ஆலோசனை மற்றும் எண்ணங்கள் அனைத்தும் அரசியல் எல்லைகளை கடந்து மதிக்கப்பட்டது. உலகில் உள்ள தலைவர்கள் மற்றும் அறிஞர்களால் மதிக்கப்பட்டு போற்றப்பட்டார். மன்மோகன் சிங் வகித்த ஒவ்வொரு உயர் பதவிக்கும், தனித்துவத்தை கொண்டு வந்தார். அதன் மூலம் நாட்டிற்கு பெருமையையும் மரியாதையையும் சேர்த்தார்.

மன்மோகன் சிங், எனது நண்பர், வழிகாட்டு . அவர் குணத்தில் மென்மையானவர். ஆனால், நம்பிக்கையில் உறுதியானவர். சமூக நீதி, மதசார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கான அவரது உறுதிப்பாடு மிகவும் ஆழமானது. அசைக்க முடியாதது. அவர் ஏற்படுத்திய வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மன்மோகன் சிங் போன்ற ஒரு தலைவரைப் பெற்றதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள நாங்களும், இந்திய மக்களும் என்றென்றும் பெருமையுடனும், நன்றியுடனும் இருப்போம்.இவ்வாறு அந்த அறிக்கையில் சோனியா கூறியுள்ளார்.

செயற்குழுவில் இரங்கல்




காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த இரக்கமுள்ள, சீர்திருத்தவாதத் தலைவர் என்றும், கருணை, பணிவு, கண்ணியம் ஆகிய அரிய பண்புகளைக் கொண்ட தலைவர் என மன்மோகன் சிங்கிற்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

Advertisement