அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி தே.மு.தி.க.,வினர் பேரணி!

15

சென்னை: போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் நோக்கி, தே.மு.தி.க.,வினர் பேரணி சென்றனர்.

மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தே.மு.தி.க., சார்பில் குருபூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்துக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.


விஜயகாந்தின் குருபூஜையில் பங்கேற்குமாறு முதல்வர் ஸ்டாலின் முதல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் பேரணி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, போலீசாரின் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்று காரணம் காட்டி, தே.மு.தி.க.,வின் அமைதிப் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் நோக்கி, தே.மு.தி.க.,வினர் பேரணி சென்றனர்.


போலீசாரின் இந்த செயல் குறித்து தே.மு.தி.க., துணை செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில், " குருபூஜையை முன்னிட்டு பேரணி நடத்த டிச.,5ம் தேதி அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. வேண்டுமென்றே பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 5 அல்லது 10 நாட்களுக்கு முன்பு பதில் கூறியிருந்தால் கோர்ட்டுக்கு சென்றிருப்போம்.


பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? காவல்துறை காழ்ப்புணர்ச்சியா? ஒரு மணி நேரத்தில் அனுமதி வழங்க நடத்த முதல்வர் அனுமதி வழங்க வேண்டும். அப்படியில்லையெனில், தடையை மீறி பேரணி செல்வது குறித்து பொதுச்செயலாளர் பிரேமலதா முடிவு செய்வார்," எனக் கூறினார்.


நடிகர் ராஜேந்திரன் கூறுகையில், "தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினர் நடத்தும் பேரணிக்கு மட்டும் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. தே.மு.தி.க., பேரணி நடத்தினால் மட்டும் கோயம்பேட்டில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமா? விஜயகாந்த் எல்லோருக்குமான தலைவர். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும்," எனக் கூறினார்.


தடையை மீறி மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகம் வரை பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையொட்டி, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement