சாலை தடுப்பில் பைக் மோதி வாலிபர்கள் இருவர் உயிரிழப்பு
திருவொற்றியூர், திருவொற்றியூரைச் சேர்ந்த நிஜாம், 22, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விஷ்ணு, 18, இருவரும் நண்பர்கள்.
நேற்று மாலை, நிஜாம் பிறந்த நாளை கொண்டாட, நண்பர்கள் இருவரும், 'பல்சர்' பைக்கில், எண்ணுார் விரைவு சாலையில், திருவொற்றியூரில் இருந்து எண்ணுார் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, எண்ணுார் விரைவு சாலை, மஸ்தான் கோவில் சந்திப்பு அருகே சென்றபோது, திடீரென பைக் நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பின்பக்கம் அமர்ந்திருந்த விஷ்ணு துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். பைக்கை ஓட்டிச் சென்ற நிஜாம், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்த திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார், உயிருக்கு போராடிய நிஜாமை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.