விசை படகில் சிக்கி 15 ஆமை இறப்பு

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை, அக்கரை, கானத்துார், உத்தண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இறந்த ஆமைகள் கரை ஒதுங்கும்.

வழக்கமாக, ஒன்று, இரண்டு என ஆமைகள் கரை ஒதுங்கும். நேற்று முன்தினம் திருவொற்றியூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று, 15 இறந்த ஆமைகள் கரை ஒதுங்கின. சில ஆமைகள் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.

நடைபயிற்சியாளர்கள் தகவலின்பேரில், வனத்துறையினர், 'ட்ரீ' என்ற அமைப்புடன் சேர்ந்து, இறந்த ஆமைகளை பள்ளம் தோண்டி புதைத்தனர்.

'ட்ரீ' அமைப்பின் நிறுவனர் சுப்ரஜாதாரணி கூறியதாவது:

இறந்த ஆமைகளை, வனத்துறை உதவியுடன் அகற்றி வருகிறோம். நள்ளிரவு ரோந்து பணியும் நடக்கிறது. எந்த கடற்கரையில் முட்டை பொரித்து, குஞ்சாக கடலுக்கு சென்றதோ, வளர்ந்தபின் அதே இடத்தில் தான் ஆமைகள் முட்டையிடும். ஒரே இடத்தில் வாழ்ந்தாலும், முட்டையிட பல்வேறு இடங்களுக்கு செல்லும்.

ஆமைகள் 40 முதல் 45 நிமிடங்களுக்கு ஒரு முறை, கடல் மேற்பரப்பில் வந்து சுவாசித்து செல்லும்.

இது போன்ற நேரத்திலும், இனப்பெருக்கம் செய்யும்போதும் விசைப்படகு, வலையில் சிக்கி பலியாகும். திருக்கை மீன் பிடிக்கும் தடிமனான வலையில் சிக்கும் ஆமைகள் தான், பெரும்பாலும் இறக்க நேரிடும். ஆமைகளை பாதுகாக்க மீனவர்களிடம் விழிப்புணர்வு அதிகப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement