மன்மோகன் சிங் மறைவுக்கு அவரது சொந்த கிராமத்தில் துக்கம் அனுசரிப்பு

4


இஸ்லாமாபாத்: மன்மோகன் சிங் மறைவுக்கு, பாகிஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமமான, காஹ் பகுதியில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.



பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பாக, ஒன்றுபட்ட பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள சக்வால் மாவட்டம், காஹ் கிராமத்தில் மன்மோகன் சிங் பிறந்தார். அவரது தந்தை குர்முக் சிங் ஒரு துணி வியாபாரி மற்றும் அவரது தாயார் அம்ரித் கவுர் ஒரு இல்லத்தரசி. அவரது நண்பர்கள் மன்மோகன் சிங்யை 'மோகனா' என்று அழைத்தனர்.



அவரது கிராமம் காஹ், தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து தென்மேற்கே 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள் மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தி அறிந்து துக்கம் அனுசரித்தனர். மன்மோகன் சிங் மறைவுக்கு, பாகிஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமம், காஹ் பகுதியில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.


கூட்டத்திற்கு தலைமை தாங்கிய, மன்மோகன் சிங் படித்த பள்ளியின் ஆசிரியர், அல்தாப் ஹுசைன், "ஒட்டுமொத்த கிராமமும் துக்கத்தில் உள்ளது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று இறந்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம்," என்றார்.

2004ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்ற போது அவருடன் படித்த பள்ளி தோழர்கள் சிலர், அந்த கிராமத்தில் வசித்தனர். தற்போது அவர்கள் அனைவருமே இறந்துவிட்டனர். எனினும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து மன்மோகனுக்கு இரங்கல் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement