நெல் வயலில் விவசாயிகளுக்கு பயிற்சி
நெல் வயலில் விவசாயிகளுக்கு பயிற்சி
வீரபாண்டி, டிச. 29-
வீரபாண்டி வட்டார வேளாண் துறை சார்பில், இனாம் பைரோஜியில், முன்னோடி விவசாயி வேலுவின் நெல் வயலில் விவசாயிகளுக்கு பகுப்பாய்வு பயிற்சி வகுப்பு நடந்தது. சேலம் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலுவலர் கவிதா, நெல் பயிரில் தீமை செய்யும் இலைப்பேன், இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், நெல் கூண்டுப்புழு உள்பட அனைத்து பூச்சிகளையும் இனம் கண்டறியும் முறைகள், தாக்குதல் அறிகுறிகள், அதேபோல் நன்மை செய்யும் ஊசித்தட்டான், தேனீக்கள், பொறி வண்டுகள், குளவிகள் உள்ளிட்ட பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்தார். தவிர உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடெர்மாவிரிடி, சூடோமோனாஸ் பயன்கள், பயன்படுத்தும் வழிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் நிவேதாஸ்ரீ, உதவி வேளாண் அலுவலர் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.