நடிகை கார் மோதி மெட்ரோ பணியாளர் பலி
மும்பை: மராத்தி நடிகை ஊர்மிளா கனேட்கர் சென்ற கார், மெட்ரோ பணியாளர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கண்டிவலியின் போயசர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
துனியாதாரி, சுப்மங்கள் சாவ்தான், தி சத்யா கே கார்டே போன்ற படங்களில் நடித்த ஊர்மிளா கனேட்கர் புகழ்பெற்ற மராத்தி நடிகை ஆவார். அவர் நடிகர் மகேஷ் கோத்தாரேவின் மகனான ஆதிநாத் கோத்தாரேவை மணந்தார்.
நடந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ''புகழ்பெற்ற மராத்தி நடிகை ஊர்மிளா கனேட்கர், நேற்று இரவு ஷூட்டிங் முடிந்து திரும்பும் போது விபத்துக்குள்ளானார். அவர் வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் , மெட்ரோ பணியாளர்கள் மீது மோதியது. இதில் மெட்ரோ ஊழியர் ஒருவர் உயிரிழந்தார் . மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தில் நடிகை ஊர்மிளாவும் காயமடைந்தார்
''காருக்குள் ஏர்பேக் பொருத்தப்பட்டதால் ஊர்மிளா கனேட்கர் உயிரிழப்பிலிருந்து தப்பினார். இருந்தபோதிலும் அவரது கார் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் முழு வேகத்தில் சென்றதால் இந்த விபத்து நடந்துள்ளது,'' என்றனர்.
விபத்து குறித்து டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.