ரூ.40 ஆயிரம் கோடி ஏற்றுமதி நிச்சயம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024ம் ஆண்டின், இரண்டாவது காலாண்டில் இருந்து, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மீண்டும் பரபரப்பாக மாறியது.
சர்வதேச அளவில், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி மற்றும் பசுமை சார் உற்பத்தியில் திருப்பூர் சாதனை படைத்தது, அனைவரது கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு, 'சீனா ஒன் பிளஸ்' என்ற கோட்பாட்டை, வளர்ந்த நாடுகள் கையில் எடுத்தன.
அனைத்து நாடுகளின் தேர்வாக இந்தியா இருந்தது. அடுத்ததாக, வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தால், அந்நாட்டின் ஏற்றுமதி வாய்ப்புகள் வகைமாறியது; இந்தியாவுக்கான ஆடை இறக்குமதியும் குறைந்தது.
இந்தியாவுக்கு பெரிய போட்டியாக இருந்த நாடுகள் வலுவிழந்தன; இதன் காரணமாக, சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் கரம் ஓங்கியது. உள்நாட்டு சந்தைகளுக்கு பெரிய சவாலாக மாறியிருந்த, வங்கதேச ஆடை இறக்குமதியும் சரிந்தது. உள்நாட்டு சந்தையிலும் இயல்புநிலை திரும்பிஇருக்கிறது.
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'கொரோனாவுக்கு பிறகு, வர்த்தக வாய்ப்புகளை தக்கவைக்கவே பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்தாண்டு பிறந்த பிறகு, நிலைமை மாறியது. புதிய வர்த்தக வாய்ப்புகள் திருப்பூரை தேடி வருகிறது. கடந்த, 2011ல் எதிர்பார்த்தபடி, இந்தாண்டில் தான், 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கை திருப்பூர் அடையும். அதன்படி, 2025ம் ஆண்டு, திருப்பூருக்கு திருப்பம் கொடுக்கும் ஆண்டாக அமையும்,' என்றனர்.