எதிர்மறை கடந்த புஷ்பா - 2

நாட்டிலேயே அதிக வசூல் சாதனையை நோக்கி அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த, சுகுமார் இயக்கியுள்ள 'புஷ்பா 2' திரைப்படம் நகர்கிறது.

நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் வரிசையில் ஆமிர்கான் நடித்த 'டங்கல்' மற்றும் பிரபாஸ் நடித்த 'பாகுபலி 2' ஆகிய படங்கள் உள்ளன.

அல்லு அர்ஜூன் கைது நடவடிக்கை, விசாரணை என்பது ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க, படத்தின் வசூலும் தொடர்ந்து அள்ளுவதாகக் கூறுகின்றனர், திரையரங்கு உரிமையாளர்கள்.

திருப்பூர் ரசிகர்கள் மத்தியில் 'புஷ்பா 2' படத்துக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், வசூலில் ஒன்றும் குறைவைக்கவில்லை.

ரசிகர்கள் கூறுகையில், ''புஷ்பா - 1 படம் எதிர்பாராத அளவு 'ஹிட்' கொடுத்தது. அல்லு அர்ஜூன் தமிழகத்தில் பிரபலமான ஹீரோ அல்ல. இருந்தாலும், படத்தின் விறுவிறுப்பு, ரசிகர்களைப் பார்க்க வைத்தது; பாடல்களும் 'ஹிட்' ஆகின. இந்த எதிர்பார்ப்புகள்தான் 'புஷ்பா -2' படத்தின் மீது ரசிகர்களுக்குக் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் போன்ற சென்டர்களில் இத்தகைய படங்கள் வழக்கமாகவே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுகின்றன. இந்த அடிப்படையில்தான் 'புஷ்பா-2' படமும், திருப்பூரில் வரவேற்பைப் பெற்றது'' என்கின்றனர்.

திரையரங்கு செல்லாத ரசிகர்கள், 'புஷ்பா 2'வின் ஓடிடி ரிலீஸூக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement