பாத்திர உற்பத்தி அதிகரிக்கும்; உற்பத்தியாளர்கள் நம்பிக்கை

அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏறத்தாழ, 250 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.

இவற்றில், பானை, டேக் ஷா, கம்பி ஷால், குடம், பராத்து, சொம்பு, இட்லி சட்டி, கஞ்சி கலயம், வாணா சட்டி ஆகிய பாத்திரங்கள் செம்பு, பித்தளை, எவர் சில்வர் ஆகிய உலோகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங் களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப் படுகிறது.

தற்போது, எலக்ட்ரானிக்ஸ், பீங்கான், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் வரத்தால், பாத்திர விற்பனை குறைந்து அதன் உற்பத்தியும் மந்த நிலையில் உள்ளது. நடுத்தர மக்களும், விவசாயிகளும்தான் பாத்திரங்களை அதிகமாக பயன்படுத்து கின்றனர். இந்தாண்டு கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் வெள்ளத்தால், மக்கள் பாதிப்பால் பாத்திர விற்பனையும் பாதிக்கப்பட்டது.

பொங்கல் பானை ஆர்டர் போதிய அளவு கை கொடுக்கவில்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 40 சத வீதம் குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுபோல், உலோகங்களில் காப்பர் கிலோவுக்கு, 200 ரூபாயும், பித்தளை, 250 ரூபாயும், எவர்சில்வர் 15 ரூபாயும், அதுபோல் உற்பத்திக்கான இதர பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த உயர்வால், பாத்திரம் விலை உயர்ந்ததையொட்டி, விற்பனை பாதிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். அதுபோல், நல்ல மழை பெய்துள்ளது. வரும் ஆண்டு நல்ல மழையால் விவசாயம் நன்றாக இருக்கும் என நம்புகிறோம். அதனால் பாத்திரம் விற்பனை அதிகரிக்கும். அதன் மூலம் எங்களது உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தை, மாசி, பங்குனி, வைகாசி, ஆனி, ஆவணி ஆகிய மாதங்கள் திருமண சீசன் மாதங்களாகும்.

திருமணத்துக்கு சீர் கொடுக்கக்கூடிய பாத்திரங்களான குடம், பராத்து, பானை, இட்லி சட்டி, சொம்பு, டேக் ஷா, அண்டா ஆகியனவற்றின் உற்பத்தி திருமண முகூர்த்த மாதங்களாக தை மற்றும் மாசியில் தீவிரமாகும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்கின்றனர், உற்பத்தியாளர்கள்.

Advertisement