சொத்து வரி விவகாரம் நீடிக்கும் காரசாரம்

நிறைவுக்கு வரும் 2024ம் ஆண்டு திருப்பூரில் அரசியல் கட்சிகளுக்கு பரபரப்பாகவே துவங்கி பெரும் பரபரப்பாகவே முடிகிறது.

அதிலும், ஆண்டு இறுதியில் கிளம்பிய சொத்து வரி உயர்வு பிரச்னை, குளிர்காலத்திலும் அனலாக கொதித்தது. வரும் புத்தாண்டில் தீர்வு கிடைக்குமா, உயர்த்தப்பட்ட வரியினங்கள் குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியிலும் அரசியல் விளையாட்டுகள் அவ்வப்போது அரங்கேறியது. மாநகராட்சியில் ெமஜாரிட்டி கவுன்சிலர்களுடன் தி.மு.க., மேயர் பதவியில் இருந்தாலும், வார்டு பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் நிர்வாகத்துடன் ஒரு இணக்கமான நிலையிலேயே இருந்து வந்தனர்.

மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின் போது கட்சி ரீதியான கருத்துகள் வெளிப்படுத்தும் போது, சில நேரங்களில் கடுமையான வாக்குவாதம் அ.தி.மு.க., கவுன்சிலர்களிடமிருந்து எழுவது வழக்கம்.

எழுந்தது பிரச்னை



இது போல் எழுந்த ஒரு பிரச்னையில் தான் மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான விவாதம் எதிர்பாராத சம்பவங்களுக்கு அடிப்படையாக மாறியது.கடந்த 2022-23ம் நிதியாண்டில் உயர்த்தப்பட்ட சொத்துவரி, நடப்பு செப்., மாதம் முதல் 6 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. அரையாண்டு துவக்கத்தில் செலுத்தாவிட்டால், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர் போராட்டம்



இவ்வாறு அபரிமிதமாக உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் விவாதம் செய்து, முற்றுகை மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத கம்யூ., மற்றும் காங்., கவுன்சிலர்கள், சொத்து வரி உயர்வைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதைக் கண்ட அ.தி.மு.க., வினரும் மறியல் செய்தனர்.இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் - பா.ஜ., கண்டன கூட்டம் -கம்யூ., காங்., உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் - வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு என போராட்டம் வலுவடைந்தது.

தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ், உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவைச் சந்தித்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மனு அளித்தார்.

மாநகராட்சி தரப்பில், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மற்றும் எதிர்ப்புகளை அடுத்து, வரி உயர்வு பிரச்னை குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாதகம் இல்லாத வகையில் தீர்வு காணப்படும் என மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு நாளில் மலரப்போகும் ஆங்கில புத்தாண்டு, சொத்து வரி உயர்வு பிரச்னைக்கு ஒரு தீர்வோடு வரும்; வரி விதிப்பில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை, திருப்பூர் மாநகராட்சி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement