மீண்டும் ஒரு சம்பவம்; தி.மு.க., நிர்வாகியைக் குற்றம் சாட்டும் அண்ணாமலை!

11

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நர்சிங் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சந்தேகத்திற்குரிய நபரைக் கைது செய்ய விடாமல் தி.மு.க., நிர்வாகி அழுத்தம் கொடுப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க., நிர்வாகி என்று அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஞானசேகரன் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே புதுக்கோட்டையில் மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், தி.மு.க., நிர்வாகியின் உறவினர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை கைது செய்ய விடாமல் போலீசாருக்கு அழுத்தும் கொடுப்பதாகவும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயின்று வரும் மாணவி, வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மாணவியின் பெற்றோர்கள், மணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மணிகண்டன் என்ற நபர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் என்பவரின் உறவினர் என்பதால், காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.

காவல்துறை எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், உண்மைக் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement