தனித்தனியாக விசாரித்த கவர்னர்; அண்ணா பல்கலைக்கு அதிரடி உத்தரவு!

31

சென்னை: அண்ணா பல்கலையில் இன்று ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு கவர்னர் ரவி, மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார்.

சென்னை அண்ணா பல்கலையில் டிச., 23ம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐகோர்ட் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்நிலையில், பல்கலை வேந்தரான கவர்னர் ரவி, இன்று அண்ணா பல்கலையில் ஆய்வு மேற்கொண்டார். பல்கலையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி., கண்காணிப்பு, அனைத்து நுழைவாயில்களிலும் இருக்கும் பாதுகாப்புகள் குறித்து பல்கலை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

மாணவ-மாணவிகள் இரு தரப்பினரிடமும் கவர்னர் தனித்தனியாக கலந்துரையாடினார். பல்கலை வளாகத்தைப் பாதுகாப்பாக மாற்ற மாணவர்கள் கொடுத்த பரிந்துரைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை மேம்படுத்த வேண்டும், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டர்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்றும், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இச்சம்பவம் குறித்து அச்சமடைய வேண்டாம் என்றும் கவர்னர் ரவி தெரிவித்தார்.

Advertisement