பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவம்: மன்னிப்பு கோரினார் ரஷ்ய அதிபர் புடின்

6


மாஸ்கோ: அஜர்பைஜான் நாட்டு பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, ரஷ்ய அதிபர் புடின் மன்னிப்பு கோரியுள்ளார்.


அஜர்பைஜான் நாட்டு பயணிகள் விமானம் கஜகஸ்தான் மீது பறந்தபோது, விழுந்து நொறுங்கியது. அதில் சென்ற பயணிகளில் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
விமானம் விழுந்து நொறுங்கியதற்கு, ரஷ்ய ஏவுகணை தாக்குதலே காரணம் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் சந்தேகம் கிளப்பின. இதை ரஷ்யா முதலில் மறுத்தது.

பல்வேறு ஆய்வுகள், தரவுகளின் அடிப்படையில், ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதே காரணம் என்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில், விமானம் தாக்கப்பட்டதற்கு, ரஷ்ய அதிபர் புடின், அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கோரியதாக, ஏ.பி., சர்வதேச செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டுள்ளது. அஜர்பைஜான் நாட்டு அதிபருடன் போனில் பேசி புடின் மன்னிப்பு கோரினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்த துயர சம்பவம் என்று புடின் குறிப்பிட்டதாகவும், ஏ.பி., நிறுவனம் கூறியுள்ளது.
உக்ரைன் நாட்டு ட்ரோன்களுக்கு எதிராக, செச்சன்யா தலைநகர் கிராஸ்னி அருகே, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவுப்பட்டன என்று இன்று கிரெம்ளின் மாளிகை அறிக்கை வெளியிட்டது. எனினும், விமானத்தை வீழ்த்தியது பற்றி அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.
'வெளியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலே, விமானம் விழுந்து நொறுங்க காரணம்' என்று, அமெரிக்கா மற்றும் அஜர்பைஜான் சார்பில் வெள்ளிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement