காங்கிரஸ் மீது பிரணாப் முகர்ஜி மகள் சரமாரி குற்றச்சாட்டு!

15

புதுடில்லி: ''காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,
முன்னாள் ஜனாதிபதியுமான என் தந்தை இறந்தபோது, காங்கிரஸ் செயற்குழு இரங்கல் தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லை,'' என்று பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஸ்தா குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்திரா அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்தவர்.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.


அவர் இறந்தபோது காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதம் பற்றி அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி தற்போது புகார் கிளப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது:
என் தந்தை இறந்தபோது, இரங்கல் தெரிவிப்பதற்கு கூட காங்கிரஸ் செயற்குழு கூடவில்லை. அதைப்பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்படவும் இல்லை.
இது பற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு அவ்வாறு இரங்கல் தெரிவிப்பது வழக்கம் இல்லை என்றார். அது சுத்த உளறல்.
என் தந்தையின் டைரியில் முந்தைய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
அதில் முன்னாள் ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இறந்தபோது, காங்கிரஸ் குழு கூடி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்த இரங்கல் தீர்மானத்தை என் தந்தை தான் தயார் செய்துள்ளார் என்பது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது.

இவ்வாறு சர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி இத்தகைய அங்கீகாரங்களை வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு மறுப்பதாகவும் சர்மிஸ்தா குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement