புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க: கமிஷனர் அறிவுரை!

சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, வழக்குப்பதிவு செய்யப்பட்டால் பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பம் சரிபார்ப்பின் போது பாதிப்பு ஏற்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறது. ஒருபுறம் இளைஞர்கள் எவ்வகையில் புத்தாண்டைக் கொண்டாடலாம் என்று திட்டங்களைத் தீட்ட, மறுபுறம் அசம்பாவிதங்கள் இல்லாத, பாதுகாப்பான கொண்டாட்டத்திற்காக சென்னை மாநகர போலீசார் தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிச.,31ம் தேதி இரவு 9 மணி முதல் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

முக்கிய சாலைகளில் வாகன நெரிசலைத் தடுக்க வேண்டும். அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைத் தடுத்து கண்காணிக்க வேண்டும். பைக் ரேசில் ஈடுபடுவோரைத் தடுத்து, கண்காணிக்க, கண்காணிப்பு சோதனைக் குழுக்களை அமைக்க வேண்டும்.

முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். என்று அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பம் சரிபார்ப்பின் போது பாதிப்பு ஏற்படும். எனவே இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

சென்னையில் டிச.,31 மாலை முதல் ஜன.,1 காலை வரை பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதி இல்லை. மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரைகளில் குதிரைப்படை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.

Advertisement