கேரளா இரட்டைக்கொலை; மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட 14 பேர் குற்றவாளி: அறிவித்தது கோர்ட்

1


கொச்சி: காசர்கோட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் கொலை தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட அந்த கட்சியின் நிர்வாகிகள் 14 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சரத் லால், 23, கிருபேஷ், 19 ஆகியோர், 2019 லோக்சபா தேர்தல் காலத்தில் பெரியா பகுதியில் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு போலீசார், 14 பேரை கைது செய்யப்பட்டனர். ஆனால், கேரளா உயர்நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து கேரளா அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கில் மொத்தம் 24 பேர் மீது சி.பி.ஐ., குற்றம் சாட்டியது. வழக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை நீதிபதி சேஷாத்ரிநாதன் விசாரித்தார். முடிவில், 10 பேரை மட்டும் விடுவித்த அவர், 14 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.


உத்மா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குஞ்சிமாரன், கண்ணங்காடு வட்டார பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 14 பேருக்கான தண்டனை ஜன.,3ல் அறிவிக்கப்பட உள்ளது.கொலையுண்ட வாலிபர்களின் பெற்றோர், தீர்ப்பை அறிவதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்தனர். 'எங்கள் மகன்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. ஆனால் எங்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மற்ற 10 பேரையும் தண்டிப்பதற்காக, சி.பி.ஐ., இந்த வழக்கை அப்பீல் செய்ய வேண்டும்' என்று அவர்கள் தெரிவித்தனர்.


எர்ணாகுளம் எம்.பி., ஹிபி ஈடன், மாவட்ட தலைவர் முகமது ஷியாஸ் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்து, கொலையுண்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.''மார்க்சிஸ்ட் கட்சியின் வன்முறை அரசியலுக்கு சம்மட்டி அடியாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது,'' என்று ஹிபி ஈடன் தெரிவித்தார்.

Advertisement