நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை
மவுன்ட் மவுன்கனுய்: முதல் 'டி-20' போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 8 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மவுன்ட் மவுன்கனுயில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் (11), ரச்சின் ரவிந்திர (8), மார்க் சாப்மேன் (15), பிலிப்ஸ் (8) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய டேரில் மிட்செல் (62), மைக்கேல் பிரேஸ்வெல் (59) அரைசதம் கடந்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (90), குசால் மெண்டிஸ் (46) நல்ல துவக்கம் கொடுத்தனர். குசால் பெரேரா (0), கமிந்து மெண்டிஸ் (0), கேப்டன் சரித் அசலங்கா (3) உள்ளிட்டோர் சோபிக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டன. ஜகாரி பவுல்க்ஸ் பந்துவீசினார். இந்த ஓவரில் 2 விக்கெட் உட்பட 5 ரன் மட்டும் கிடைத்தது.
இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 164 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் 3 விக்கெட் சாய்த்த ஜேக்கப் டபி, ஆட்ட நாயகன் விருது வென்றார். நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.