தொழில் நகரில் சிறக்கும் சுற்றுலா சூழல்

26 நவ., 2024

'நம்ம ஊர்ல சினிமா தியேட்டரை விட்டால், பொழுது போக்க ஒன்னுமே இல்லையே...'

இந்தக் குறையை போக்க, மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி துவக்கப்பட்ட நாள்.அடர்ந்து படர்ந்த தொழிற்சாலைகள், அடர்த்தியாய் வாழும் தொழிலாளர் குடும்பங்கள் என, இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், இயற்கையாய் அமைந்துவிட்ட ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் உருவாக்கி, படகுசவாரியை அறிமுகம் செய்திருக்கிறது, சுற்றுலாத்துறை. சிறுவர் பூங்கா உள்ளிட்ட கட்டமைப்பு டன் உள்ளூர்வாசிகளை ஈர்க்க முனைப்புக் காட்டப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாணிக்காபுரம் குளம், திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள குளத்திலும் படகு சவாரி விடுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர் சுற்றுலாத்துறையினர்.

இவை தவிர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வரைபடத்தில் இடம் பிடித்துள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவில், உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர், மானுபட்டி ஏழுமலையான் கோவில், காங்கயம் - சிவன்மலை ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி கோவில், திருப்பூர் - எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரம் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில், தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி ஆகிய கோவில்களுக்கும் ஆன்மிக சுற்றுலா என்ற அந்தஸ்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

17 ஆக., 2024

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு, 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்பட்டநாள்.

உலகளவிய நாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம், கடந்த, 1971ல், ஈரான் நாட்டில் உள்ள, 'ராம்சர்' என்ற நகரில் நிறைவேற்றப்பட்டது.

இது, ஈர நிலங்களின் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தமாகும். ஈர நிலம் பாதுகாப்பு சார்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கியத்துவம் இதன் வாயிலாக வழங்கப்படுகிறது.

ஈர நிலங்களின் பாதுகாப்பு, அங்கு வாழும் பல்வேறு உயிர்களின் வாழ்விட பாதுகாப்பு, அதன் வாயிலாக பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழலை உறுதிப்படுத்தும் ஒப்பந்தமாகும். அந்த வகையில் ராம்சர் அங்கீகாரம் பெறும் ஈர நிலங்கள், உலகளாவிய முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த முக்கியத்துவத்தை நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் பெற்றிருக்கிறது. வனத்துறை பராமரிப்பில் உள்ள நஞ்சராயன் குளம், நுாற்றுக்கணக்கான உள்நாட்டு பறவைகளின் வாழ்விடமாக, வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து போகுமிடமாக இருந்து வருகிறது.

இயற்கைக்கு இன்னல் ஏற்படுத்தாத வகையில் இங்கு சூழல் சுற்றுலாவை ஏற்படுத்துவது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement