ரூ.30 லட்சம் வழிப்பறி வழக்கில் இருவர் கைது கார், ரூ.13 லட்சம் பறிமுதல்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.30 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை அருகேவுள்ள கண்ணங்குடியைச் சேர்ந்த சவுந்தரபாண்டி மகன் அரவிந்த் 27. இவர் காரைக்குடியில் பைனான்ஸ் கடை ஒன்றில் வேலை செய்கிறார். டிச.,22 ல் ரூ.30 லட்சத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் சென்றார்.

காரைக்குடி ஜாகிர் உசேன் தெரு அருகே பைக்கில் வந்த 3 நபர்கள் அரவிந்தன் பைக்கில் மோதி கீழே தள்ளினார். பின் அவரது கண்ணில் ஸ்பிரே அடித்து நிலை தடுமாறச்செய்து பைக்கில் வைத்திருந்த ரூ. 30 லட்சத்தை பறித்து தப்பினர்.

போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய பைக்குகள் தேவகோட்டையில் இருப்பது தெரிந்தது. அப்பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் அலைபேசி எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அவர் காளையார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டது தெரிய வந்தது. அப்பெண்ணை விசாரித்த போது செல்வகுமார் வழிப்பறி செய்த பணத்தில் பைக் வாங்கி கொடுத்ததும், செலவுக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது. தேவகோட்டை பூங்கொடியேந்தலைச் சேர்ந்த செல்வக்குமார் 24, மற்றும் இதில் தொடர்புடைய திருச்சி ஒத்தக்கடை சமயபுரத்தைச் சேர்ந்த பழனியாண்டி மகன் மதன்குமார் 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய காரைக்குடி சுப்பிரமணியபுரம் கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Advertisement