3ம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகம்

திருப்பூர், ;அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்புக்கு மாவட்ட கல்வித்துறை தயாராகி வருகிறது. மாணவ, மாண வியருக்கு வழங்க தேவையான மூன்றாம் பருவப் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் தேதி பிளஸ் மற்றும், பிளஸ் 1 வகுப்புக்கும், மறுநாள் பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டு தேர்வு துவங்கியது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன.

கடந்த 16ம் தேதி ஒன்று முதல் ஐந்து மற்றும் ஆறு முதல், எட்டாம் வகுப்புக்கான தேர்வுகள் துவங்கின. அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும், கடந்த, 23ம் தேதி நிறைவு பெற்று, 24 முதல் ஜன., 1ம் தேதி வரை ஒன்பது நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.

ஜன., முதல் வாரம் பள்ளி கள் திறக்கப்பட உள்ளன. மாவட்ட கல்வித்துறை தயாராகியுள்ளது. சென்னை பாடநுால் கழகத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு, 7.51 லட்சம் புத்தகம், நோட்டுகள் தருவிக்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் வசமிருந்த புத்தகங்கள், தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, கல்வி மாவட்ட, வட்டார அளவில் இவற்றை பிரிக்கும் பணி முடிந்து, துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு அனுப்பட்டுள்ளது.

திருப்பூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் கூறுகையில், 'திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு, அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், பொங்கலுார் வட்டாரங்களை சேர்ந்த, 605 பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டு முன்கூட்டியே புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. தட்டுப்பாடு இல்லை. தேவையான புத்தகங்கள் இருப்பில் உள்ளது,' என்றனர்.

Advertisement