ஆயுள் காக்கும் சோளம் அதிகரித்த விழிப்புணர்வு
பயமறியா இளம் வயதிலேயே சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற உயிர் கொல்லும் வியாதிகள், தொற்றிக் கொண்டு, பதைபதைக்க வைக்கின்றன. அதன் விளைவு, உணவுப்பழக்கம் மீதான விழிப்புணர்வு, 2024ம் ஆண்டில் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இதற்கு, வேளாண் துறையின் சில ஊக்குவிப்பு திட்டங்கள் கைகொடுத்திருக்கின்றன.தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:
சோளம், ராகி, கம்பு, குதிரைவாளி, தினை போன்ற சிறுதானியங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதுடன், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்ற விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். இதை, விவசாயிகளும், பொதுமக்களும் உணர்ந்துள்ளனர். திருப்பூரை பொறுத்தவரை, ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சோளம் தான் பிரதான சிறுதானிய பயிராக உள்ளது.
இந்தாண்டு, கோ - 32 ரக சோளம், அறிமுகம் செய்யப்பட்டது. அதிகளவு தட்டு, தானியம் தரும் இவ்வகை சோளத்தை, அதிகளவில் விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர்.
இதுநாள் வரை கால்நடை தீவனத்துக்கு மட்டுமே சோளம் பயிரிடப்பட்ட நிலையில், தற்போது, 10 முதல், 20 சதவீத விவசாயிகள் உணவு தானியமாகவும் சோளம் பயன்படுத்த துவங்கியிருப்பது, வரவேற்புக்குரியது.
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது, அதனுடன் சோளம் கலந்து அரைக்கும் நிலையை பல இடங்களில் பார்க்க முடிகிறது.புதிய ரக சோளத்துக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால், இந்தாண்டு, வேளாண் துறை சார்பில், 60,000 கிலோ, அதாவது, 60 டன் சோளம் விதை உற்பத்தி செய்து வழங்கியிருக்கிறோம்.
வேளாண் துறை, தோட்டக்கலை துறையினர் வாயிலாக ஏற்படுத்தப்பட்டு வரும் நவீன முறை வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் விவசாயிகள் மத்தியில் பலன் தந்திருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பூரை பொறுத்தவரை, ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சோளம் தான் பிரதான சிறுதானிய பயிராக உள்ளது. இந்தாண்டு, கோ - 32 ரக சோளம், அறிமுகம் செய்யப்பட்டது. அதிகளவு தட்டு, தானியம் தரும் இவ்வகை சோளத்தை, அதிகளவில் விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர்.