ஆட்டோவில் மது அருந்திய பெயின்டர் கொலை

அண்ணா நகர்: அண்ணா நகர், எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி, 32; பெயின்டர். நேற்று காலை, அதே பகுதியை சேர்ந்த தினேஷ், 21, என்பவரின் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

இது குறித்து, தினேஷ் தட்டிக்கேட்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின், மதியம் எம்.ஜி.ஆர்., காலனி, காந்தி தெரு வழியாக நடந்து சென்ற துரைசாமியை வழிமறித்த தினேஷ் மற்றும் அவரது அண்ணன் நரேஷ், 22, ஆகியோர், ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக கேட்டு, தகராறில் ஈடுபட்டனர்.

மேலும், பீர் பாட்டிலால் துரைசாமி தலையில் தாக்கி தப்பினர். பலத்த காயமடைந்த துரைசாமியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவ பரிசோதனையில், துரைசாமி உயிரிழந்தது தெரியவந்தது. அண்ணா நகர் போலீசார், தப்பியோடிய சகோதரர்களை தேடி வருகின்றனர்.

Advertisement