3.5 ஆண்டுகளில் இந்திய நெசவு துறையில் நவீனமயமாக்கல்! ரூ.18,500 கோடி இயந்திரங்கள் இறக்குமதி
கோவை; இந்திய நெசவுத் துறையில் நவீனமயமாக்கல் வேகமாக நடந்து வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும், 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புடைய, ஜவுளித்துறை சார்ந்த நவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில், வேளாண்துறைக்கு அடுத்தபடியாக, ஜவுளித்துறைதான் அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது.
இந்தியா முழுவதும், பல மாநிலங்களில் ஜவுளித்துறை கட்டமைப்பு உள்ளது. குறிப்பாக, தறி எனப்படும் 'வீவிங்' (நெசவு) துறையில் ஏராளமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
சீனாவை ஒப்பிடும்போது, இந்தியாவின் ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில், நெசவுத் துறையில் நவீனமயமாக்கலும், உற்பத்தித்திறனும் குறைவாகவே இருந்து வந்தது. இந்த நிலை தற்போது மாறி வருகிறது.
நவீன தறிகள் இறக்குமதி
இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், கடந்த 4-5 ஆண்டுகளாக, அதிநவீன ஏர்ஜெட் மற்றும் வாட்டர்ஜெட் தறிகளை, இறக்குமதி செய்து நிறுவி வருகின்றனர்.
2021-2022ம் ஆண்டில், இத்தகு நவீன தறிகளின் இறக்குமதி மதிப்பு, ரூ. 3,818 கோடியாக இருந்தது. 2022-23ம் ஆண்டில், ரூ.6,440 கோடியாகவும், 2023-24ம் ஆண்டில் ரூ.5,500 கோடியாகவும் இருந்தது.
நடப்பு நிதியாண்டில் முதல் 7 மாதங்களில், ரூ.2,700 கோடிக்கு நவீன தறி இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றம், துணி உற்பத்தித் துறையை நவீனப்படுத்தி, போட்டித்திறனை அதிகரிக்கும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
இந்தியளவில், 'வீவிங்' துறை நவீனமயமாக்கல் மிக அவசியமானது. அதிக உற்பத்தித் திறன், பல்வேறு ரக துணிகளை, விரைவாக உற்பத்தி செய்யும் திறன், உயர் தரம் என எல்லா வகைகளிலும், இந்த நவீனமயமாக்கல் நம் ஜவுளித் துறையின் போட்டித்திறனை மேம்படுத்தும். ஏற்றுமதி அதிகரிக்கும்.
ஓராண்டில் உலக அளவில், 'வீவிங்' துணிகள் மட்டுமே ரூ.8 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதில், சீனாவின் பங்களிப்பு மட்டும் 50 முதல் 60 சதவீதம் வரை உள்ளது. தற்போது 'சைனா பிளஸ் ஒன்' என்ற வாய்ப்பில், துணிகள் ஏற்றுமதியும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
தமிழகம், மஹாராஷ்டிரா மாநிலங்கள் ஏர்ஜெட் வீவிங் தொழில்நுட்பத்திலும், குஜராத் வாட்டர்ஜெட் வீவிங் தொழில்நுட்பத்திலும், முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன.
மிகப்பெரிய பிராண்டுகளிடம் இருந்து, சாயமிடப்பட்ட துணிகள் ஏற்றுமதிக்கான விசாரணைகள் தமிழகத்துக்கு வருகின்றன.
தமிழக ஜவுளித்துறை, பிராசஸிங் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, நெசவுத் துறையை நவீனப்படுத்தும் பலனை, மதிப்புக்கூட்டப்பட்ட சாயமிடப்பட்ட துணிகளின் ஏற்றுமதி வாயிலாக, முழுமையாக பெற முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.