அண்ணாமலை அடித்துக்கொண்டது தி.மு.க., ஆட்சிக்கான சவுக்கடி சொல்கிறார் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ''அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அடித்துக் கொண்ட சவுக்கடி என்பது தி.மு.க., ஆட்சிக்கான சவுக்கடி ஆகும்,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

அவர் கூறியதாவது:

இன்றைக்கு எந்த நாட்டில் ஆன்மிகம் செழிக்கிறதோ அந்த நாடு சிறப்பாக இருக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததுடன் அறவழியில் தன்னுடைய போராட்டத்தை துவக்கி அவரே தனக்கு தானே அடித்துக்கொண்ட சவுக்கடி, தி.மு.க., ஆட்சிக்கான சவுக்கடி.

இது குறித்து முதல்வர் ஸ்டாலினோ, துணை முதல்வர் உதயநிதியோ கருத்து தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கும் செய்தி. அண்ணாமலை நடத்திய போராட்டத்தை தான் விமர்சிக்கின்றனர். இதன் மூலம் தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் மக்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். அண்ணா பல்கலை பிரச்னையில் தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைவு தான். நிர்வாக செலவுகள், வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தல், வரி வருவாயை அதிகரித்தல் உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.

பா.ம.க.,வில் நடப்பது உட்கட்சி பிரச்னை. அதை அவர்களே பேசி சரி செய்து கொள்வர். இதில் தலையிடுவது அர்த்தமற்றது என்றார்.

Advertisement