ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி பிக்சட் டிபாசிட்டுக்கு உச்ச வரம்பு உள்ளதா?
என் தந்தை மிக சமீபத்தில் காலமானார். அவர் சேமித்து வைத்திருந்த தொகையை கொண்டு, என் வீட்டுக்கடனை முழுமையாக அடைத்தால் வரி ஏதாவது கட்ட வேண்டியிருக்குமா? மேலும், மீதமிருக்கும் தொகைக்கும் வரி கட்ட வேண்டியிருக்குமா?
ஜே.சுப்ரமணியன், கோவை
எந்த வரியும் கட்ட வேண்டியிருக்காது. அவர் உங்களை நாமினியாக போட்டு, அதன் வாயிலாக உங்களுக்கு அவரது சேமிப்பு வருகிறது. இனிமேல் அது உங்கள் தொகை.
உயிரோடு இருக்கும்போது, அப்பா உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் இருந்து இன்னொரு நெருங்கிய உறவினருக்கு பணம் கொடுக்கப்பட்டாலே, அது 'பரிசு' என்று தான் கருதப்படும். அதற்கு வரி கிடையாது. அதேபோல் தான் இதுவும்.
வங்கியில் பணத்தை பிக்சட் டிபாசிட் செய்ய இவ்வளவு தான் என வரையறை எதுவும் இருக்கிறதா?
என்.கந்தசாமி, மதுரை
இல்லை. எவ்வளவு டிபாசிட் செய்தாலும் வங்கிகளுக்கு மகிழ்ச்சி தான். வைப்பு நிதிக்கு வரும் வட்டி, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே போனால், அதற்கு வருமான வரி கட்ட வேண்டும்.
அதாவது, மூத்த குடிமக்கள் ஈட்டும் வட்டி, ஆண்டுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், 10 சதவீதம் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படும். மற்றவர்களுக்கு வட்டி 40,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், 10 சதவீதம் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படும். இப்போது பெரும்பாலான வங்கிகள், அதிக வட்டி தரத் துவங்கியுள்ளன; பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மியூச்சுவல் பண்டு போர்ட்போலியோவில், ஒருவர் எத்தனை வகையான பண்டுகளை வைத்துக் கொள்ளலாம்?
சோ.ராமு, திண்டுக்கல்
வகைக்கு ஒன்று வைத்துக் கொள்ளுங்கள். 'லார்ஜ்கேப், பிளெக்ஸிகேப், வேல்யூ பண்டு' ஆகியவற்றில் நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் மொத்த தொகையில் 60 - 65 சதவீத தொகையை போடுங்கள்.
'மிட்கேப், மிட்கேப் பிளஸ் ஸ்மால்கேப்' பண்டுகளில் இன்னொரு 25 - 30 சதவீத பணத்தை போடுங்கள். 10 சதவீதத்தை தங்கம் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டத்தில் போடுங்கள்.
நம் சந்தையில், 1,400 பண்டு திட்டங்களுக்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும், எந்த பண்டு கடந்த 10 ஆண்டுகளில் நல்ல வரவை ஈட்டித் தந்திருக்கிறது என்பதை பார்த்து தேர்வு செய்யுங்கள்.
முதலீடு செய்த உடனே வளர்ச்சியை எதிர்பார்க்க வேண்டாம். ஐந்து முதல் ஏழாண்டுகள் வரை காத்திருக்கும் மனநிலையோடு முதலீடு செய்யுங்கள். பொறுத்தார் பூமியாள்வார் என்பதற்கு நேரடி உதாரணம் மியூச்சுவல் பண்டு முதலீடு.
நான் மூத்த குடிமகன். என்னிடம் உள்ளதை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். ரிஸ்க் குறைவான முதலீட்டு வகையை தெரிவிக்கவும்.
நஞ்சப்ப செட்டி, சென்னை
மூத்த குடிமகன் என்றாலும், உங்களுடைய 'ரிஸ்க்' தாங்கும் அளவு எவ்வளவு என்று என்னால் கணிக்க முடியவில்லை. உங்கள் மாதாந்திர செலவுகள் எவ்வளவு? கடன் ஏதேனும் உண்டா என்பதெல்லாம் தெரிந்தால் தான் ஒரு முடிவுக்கு வர இயலும்.
இப்போதைக்கு வங்கி வைப்பு நிதி தான் பெரும்பாலானோர் நாடுவது. மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கிறது. பெரும்பாலும் 7 முதல் 7.50 சதவீத வட்டி கிடைக்கும். நீங்கள் வங்கி பிக்சட் டிபாசிட்டுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக் கூடியவர் என்றால், வங்கியல்லாத நிதி நிறுவனங்களை நாடலாம். 9 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.
இன்னும் துணியக்கூடியவர் என்றால், மியூச்சுவல் பண்டு பக்கம் செல்லலாம். 10 முதல் 12 சதவீதம் ரிட்டர்ன் கிடைக்க வாய்ப்புண்டு. எது உங்களுடைய ரிஸ்க் வரையறைக்குள் இருக்கிறதோ, அதில் முதலீடு செய்யுங்கள்.
நான் பல்வேறு மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். அதில், என் முகவரியை மாற்றம் செய்ய விரும்புகிறேன். ஆதாரில் புதிய முகவரி மாற்றத்தை செய்துள்ளேன்.
பார்த்தசாரதி, தாராபுரம்
உங்கள் மியூச்சுவல் பண்டு முகவரை அழைத்து, புதிய முகவரியை மாற்றுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள். 'இ - மெயில்' வாயிலாகவே இதை செய்ய முடியும்.
மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் போலியோ எண், வாடிக்கையாளர் எண் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதுங்கள். புதிய முகவரிக்கு ஆதாரமாக, ஆதார் அட்டையின் நகலை இணைத்து அனுப்புங்கள்; எளிதாக முகவரி மாற்றம் செய்துவிடலாம்.
தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனுக்கான வட்டி அதிகமாக இருந்ததால், அந்த கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றினேன். அந்த வங்கியில் கொடுத்த டி.டி.,யை முந்தைய வங்கியில் கொடுத்தேன். அவர்கள் அதை 20 நாள் கிளியரிங்குக்கு போடாமல் வைத்திருந்து, அந்த 20 நாட்களுக்கு உரிய வட்டியை கட்டினால் தான் டாக்குமென்ட் தர முடியும் என்று சொல்லி விட்டனர். அதனால், அந்த தொகையை செலுத்தி, என்.ஓ.சி., வாங்கி வைத்துள்ளேன். ஆனாலும், இன்னும் டாக்குமென்டை கொடுக்கவில்லை. என்ன செய்வது? கட்டிய கூடுதல் தொகையை திருப்பி வாங்க வழி இருக்கிறதா?
சக்திவேல், திருப்பூர்
இப்படி நடக்க வாய்ப்பில்லை. எந்த வங்கியும் 20 நாட்கள் தாமதப்படுத்தாது. அப்படியே நடந்திருக்குமானால், முந்தைய வங்கியின் நோடல் அலுவலருக்கு கடிதம் எழுதி புகார் அளியுங்கள்.
உங்கள் தரப்பில் இருந்து டி.டி.,யை கொடுத்த தேதியை குறிப்பிட்டு புகார் எழுதுங்கள். என்ன நடவடிக்கை எடுக்கிறார்? விளக்கம் கொடுக்கிறார் என்று பாருங்கள். உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், குறைதீர் ஆணையர் பார்வைக்கு எடுத்துச் செல்லுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881