கொடுப்பதே மகிழ்வு தரும்
நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து பாருங்கள், மனதுக்கு அமைதியும் மனநிறைவும் தானாக ஏற்படும். கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று யாருமே சொல்லமுடியாது. உடை தானமாக, உழைப்பு தானமாக, பொருட்கள் தானமாக சேவையின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம் என்கிறார் மதுரை வல்லபாய் ரோட்டைச் சேர்ந்த கல்பதரு அறக்கட்டளை திட்ட மேலாளர் சரத்குமார்.
நீங்கள் பயன்படுத்திய உடையையும் உடைமைகளையும் ஒப்படைத்தால் அதை புதிதாக்கி இல்லாதவர்களுக்கு வழங்கி அழகுபார்க்கிறோம் என்று ஆரம்பித்தார்.
வீடுகளில் பயன்படுத்திய பழைய பித்தளை பொருட்கள், எவர்சில்வர் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்களை வழங்கலாம். ஆடைகளை மறுசுழற்சி முறையில் புதிய ஆடைகளாக்குகிறோம். கலை, அறிவியல், இன்ஜினியரிங் பாடப்புத்தகங்களையும் சிலர் இலவசமாக தருகின்றனர். அவற்றை அலமாரியில் வைத்துள்ளோம். தேவைப்படும் மாணவர்கள் இலவசமாக பெற்றுச் செல்கின்றனர்.
குழந்தைகளிடம் இருந்து ரப்பர், பென்சில், ஸ்கேல் கிடைத்தால் கூட வாங்கி கொள்கிறோம். சிலர் பயன்படுத்தாத பழைய டைரிகளை தானமாக தருகின்றனர். அவற்றில் பெயின்டிங் வேலைப்பாடு செய்து புதிதாக்கி விற்கிறோம். ஒரு சிலர் புதிய மெத்தை, போர்வை, தலையணைகளை தானமாக வழங்குவதுண்டு. அவற்றை குறைந்த விலைக்கு விற்கிறோம். அதேபோல பழைய பர்னிச்சர்களையும் புதிதாக்கி அவற்றில் கூடுதல் வேலைப்பாடு செய்து விற்கிறோம். கிடைக்கும் தொகை முழுவதும் அறக்கட்டளை மூலம் இல்லாதவர்களுக்கே செலவிடப்படுகிறது.
அன்பை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதையே நாங்கள் பிறருக்கு சொல்கிறோம் என்றார் சரத்குமார்.
தானம் தர ஆசையா 81246 04716ல் தொடர்பு கொள்ளுங்கள்.