புதிய விதிமுறைகளை பின்பற்றி ஓமன் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி

நாமக்கல்: ஓமன், கத்தாருக்கு புதிய விதிமுறைகளின்படி முட்டை ஏற்றுமதியை துவங்க உள்ளதாக, முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், உள்நாட்டில் மட்டுமின்றி ஓமன், பக்ரைன், கத்தார், துபாய், மாலத்தீவு, ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இரு மாதங்களுக்கு முன், கத்தார் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதித்ததால், முட்டை ஏற்றுமதி, 50 சதவீதம் சரிந்தது. அதை தொடர்ந்து, ஓமன் நாடும், இந்திய முட்டைகளின் புதிய இறக்குமதிக்கு அனுமதியை நிறுத்துவதாக அறிவித்தது.

இதையடுத்து, துாத்துக்குடி, கொச்சியில் இருந்து ஓமனுக்கு, 45 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்ட முட்டைகள், துறைமுகம் மற்றும் நடுக்கடலில் தேக்கமடைந்தன.

இதுகுறித்து, முட்டை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது: ஓமன் நாட்டுக்கு, மாதந்தோறும், 150 முதல், 200 கன்டெய்னர்களில், 8 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன. அந்நாடு, இறக்கு மதிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்ததால், முட்டை ஏற்று மதியில் பின்னடைவு ஏற்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசிடம் வலியுறுத்தினோம். அரசு உத்தரவுப்படி, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முட்டைகளை இறக்க ஓமன் அனுமதித்தது. ஜனவரி முதல் இறக்குமதிக்கான அந்நாட்டின் புதிய விதிமுறைகள்படி, முட்டை ஏற்றுமதி துவங்கும். கத்தாரை பொருத்தவரை மாதம், 60 கன்டெய்னர்களில், 3 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்நாட்டில், 60 கிராம் எடையுள்ள முட்டைகளை மட்டுமே சில்லரை விற்பனை செய்ய வேண்டுமென சட்டம் உள்ளது. தமிழகத்தில், 50 முதல், 55 கிராம் எடை கொண்ட முட்டைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறோம்.

இதை மாற்றி, கத்தாருக்கு, 60 கிராம் எடையுள்ள முட்டை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். கத்தார், ஓமனில் ஏற்றுமதியில் உள்ள பிரச்னை காரணமாக, முட்டை தேக்கமடைந்தாலும், அவற்றை வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். அதனால், இழப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement