பைனான்சியரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, பெருமாள்குப்பம் பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் சென்னையன்,63. இவருக்கும், இவரின் சித்தப்பா மகன்களான நாகராஜ்,80, அவரின் தம்பி சென்னையன்,68, நாகராஜ் மகன் மணிகண்டன்,33, ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாக பூர்வீக சொத்தில் வழிபாத்தியம் சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த டிச.,19 மாலை சென்னையன், மத்தூரிலிருந்து தன் வீட்டிற்கு இரு சக்கர எலக்ட்ரிக் பைக்கில் சென்றபோது, மாடரஹள்ளி ஆற்றுப் பாலம் அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த சென்னையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுசம்மந்தமாக சித்தப்பா மகன்களான நாகராஜ், அவரின் தம்பி சென்னையன், நாகராஜ் மகன் மணிகண்டன், ஆகிய மூன்று பேரை கடந்த டிச., 20ல், போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தொடர் விசாரணையில் திடுக் தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி போலீசார் கூறியதாவது: பைனான்சியர் சென்னையனை கொலை செய்ய கூலிப்படையினருக்கு, 1.25 லட்சம் ரூபாய், வீட்டுமனை ஒன்று வழங்குவதாக பேரம் பேசியுள்ளனர். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் கூலிப்படையினரை தேடி வந்தோம். நேற்று கூலிப்படையை சேர்ந்த ஓபிளிகாட்டூர் பகுதியை சேர்ந்த சரவணன்,54, அவரின் மகன் ஜெஷ்வந்த்,19, மாடரஹள்ளியைச் சேர்ந்த அண்ணாமலை (எ) கதிர்,21, அதே பகுதியைச் சேர்ந்த பரத், 19, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தோம். இவ்வாறு கூறினர்.

Advertisement