அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது; சொல்கிறார் சீமான்
திருச்சி: 'தனது கோபத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை விமர்சிக்க முடியாது. அவரது கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது' என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: 35 வருட கட்சியான பா.ம.க.,வில் நேற்றைய பிரச்னை சரியாகிவிடும். வார்த்தை மோதல் குறித்து நான் கருத்து கூற முடியாது. அன்புமணிக்கு கூட தலைவர் பதவியை நம்பிக்கையின் அடிப்படையில் தான் ராமதாஸ் வழங்கி இருக்கிறார். எதற்குமே நிதியில்லை என கூறி வரும் தி.மு.க., அரசுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க மட்டும் நிதி இருக்கிறதா? மழை நீர் செல்ல இடமில்லை. ஏதற்கு 62 ஆயிரம் கோடிக்கு மெட்ரோ?
வன்கொடுமை
கமிஷன் வாங்குபவர்களை தேர்வு செய்து விட்டு, தலைவர்களை தேர்வு செய்யாமல் எப்படி அவர் மக்களுக்கு செலவு செய்வார். அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் எப்.ஐ.ஆர்., மட்டும் எப்படி வெளியானது. இது வன்கொடுமையை விட மிக கொடூரம். போலீசார் முறையாக செயல்பட்டிருந்தால் நீதிமன்றம் ஏன் கண்டிக்கப் போகிறது? பல்கலை வளாகத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதை எப்படி நம்புவது? இவ்வாறு சீமான் கூறினார்.
விமர்சிக்க முடியாது
அண்ணாமலை சாட்டையால், அடித்துக் கொண்டது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் அளித்த பதில்: தனது கோபத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை விமர்சிக்க முடியாது. அவரது கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது. எனக்கு கூட தான் கோபம் இருக்கிறது. குற்றவாளியைதான் சாட்டையால் அடிக்க வேண்டும். நம்மை எதற்கு சாட்டையால் அடித்து கொள்ள வேண்டும்.
இதனை கேட்கும் போது கஷ்டமாக இருந்தது. அவருடைய உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். செருப்பு அணிய மாட்டேன் என்றெல்லாம் அண்ணாமலை கூறியதை ஏற்க முடியாது. தம்பி இடம் இந்த களத்தில் ஒரு அண்ணண் என்ற முறையில் நான் சொல்வது, இந்த நாட்டில் நிறைய மாறுதல்களை செய்ய வேண்டும். அதனை தான், நான் அடிப்படை அரசியல் மாற்றம் என்று சொல்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.