அக்காவிடம் டியூஷன் வந்த சிறுவனை கடத்திய தங்கை

சென்னை: எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், 10ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அதே பகுதியில் உள்ள வீட்டில் 'டியூஷன்' படிக்க சென்றார்.

இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வெளியே சென்ற சிறுவன், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் எம்.ஜி.ஆர்., நகர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், சிறுவன் தனக்கு டியூஷன் எடுக்கும் பெண்ணின் தங்கையான, 23 வயது இளம்பெண் மற்றும் கே.கே., நகரை சேர்ந்த ராகுல், 19, ஆகியோருடன், புதுச்சேரி சென்றது தெரிந்தது.

இதையடுத்து, புதுச்சேரி சென்ற தனிப்படை போலீசார், மூவரையும் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சிறுவனும், 23 வயது பெண்ணும் காதலித்து வந்ததும், இருவரும் சேர்ந்து வாழ நண்பன் ராகுல் உதவியுடன் புதுச்சேரி சென்றதும் தெரிந்தது. சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி, அசோக் நகர் மகளிர் போலீசார், இளம்பெண்ணிடம் எழுதி வாங்கி, எச்சரித்து அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement