கட்சியில் காரசார விவாதம் நடப்பது சகஜம்: தந்தையை சந்தித்தபின் அன்புமணி பேட்டி

19

புதுச்சேரி: 'ஜனநாயக கட்சியில் விவாதம் நடப்பது சகஜம் தான்' என தந்தையை சந்தித்த பின், நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி தெரிவித்தார்.


புதுச்சேரி அருகே பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று பா.ம.க., சார்பில், '2024க்கு விடை கொடுப்போம்; 2025ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மேடையிலேயே அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே, நேரடியாக நடந்த காரசார பேச்சு மோதல், ஏற்பட்டது.


குடும்ப உறுப்பினரான முகுந்தன் பரசுராமனுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கும் விவகாரத்தில் இருவரும் மோதிக் கொண்டனர். ராமதாஸ், ''நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். புரிகிறதா... யாராக இருந்தாலும், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது' என கோபமாக தெரிவித்தார். இதையடுத்து அன்புமணி, தனியாக பனையூரில் அலுவலகம் தொடங்கி இருப்பதாகவும், தன்னை அங்கு வந்து சந்திக்கலாம் என்றும் பொதுக்குழுவில் அறிவித்தார்.



இந்த பிரச்னை கட்சியினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தந்தை - மகன் இடையே சமரசம் பேசினர். ராமதாஸ் -அன்புமணி இடையே மோதல் வெடித்த பிரச்னைக்கு காரணமாக கருதப்படும் முகுந்தன், 'தனக்கு எந்த பதவியும் வேண்டாம். நான் பிரச்னைக்கு காரணமாக விரும்பவில்லை' என்று கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், இன்று (டிச.,29) தைலாபுரம் தோட்டத்தில் தந்தையை அன்புமணி சந்தித்தார். இருவரும், குடும்பத்தினர் முன்னிலையில் பிரச்னை பற்றி நீண்ட நேரம் பேசினர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி கூறியதாவது: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம். பா.ம.க., வளர்ச்சிப் பணிகள் குறித்து ராமதாஸ் உடன் பேசினேன். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து குழுவாக பேசினோம். இந்தாண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு, மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுள்ளோம்.



இதற்கு ஏற்ப எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தலைமையில் விவாதித்தோம். எங்கள் கட்சி ஒரு ஜனநாயகம் கட்சி. ஜனநாயக கட்சியில் நடக்கின்ற பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம். எங்களுக்கு ஐயா, ஐயா தான். இன்றைக்கு ஐயாவிடம் பேசி கொண்டு இருந்தோம். எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து, நீங்கள் பேசுவதற்கு ஏதும் தேவையில்லை. எங்களுடைய உட்கட்சி பிரச்னை. நாங்கள் பேசி கொள்ளுவோம். இவ்வாறு அன்புமணி கூறினார்.

Advertisement