நாடு கடத்தப்பட்ட 8 வங்கதேசத்தவர்கள்: உறுதி செய்த டில்லி காவல்துறை
புதுடில்லி: டில்லி ரங்புரியில் வசித்த 8 வங்கதேச பிரஜைகளை கண்டுபிடித்து, அவர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்று டில்லி காவல்துறை இன்று தெரிவித்தது.
இது தொடர்பாக டில்லி காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: 8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள், அங்கீகரிக்கப்படாத வழிகளில் நுழைந்து, டில்லியின் ரங்புரி பகுதியில் வசித்து வந்தனர். ஜஹாங்கீர், அவரது மனைவி மற்றும் அவர்களது ஆறு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் வங்கதேசத்தின் மதரிபூர் மாவட்டத்தில் உள்ள கேகர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
தங்களது வங்கதேச அடையாள ஆவணங்களை அழித்தும், அவர்களின் உண்மையான அடையாளத்தை மறைத்தும் டில்லியில் வசித்து வந்துள்ளனர்.
வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு, ரங்புரியில் கடுமையான சரிபார்ப்பு இயக்கத்தை மேற்கொண்டது.
இந்த தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள 400 குடும்பத்தினரிடம் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜஹாங்கீர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என ஒப்புக்கொண்டனர். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் நாடு கடத்தல் செயல்முறை முடிந்தது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.