அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி!
புதுடில்லி: நடப்பு 2025ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மிக பிஸியாக இருப்பார்கள். முதல் 6 மாதத்தில் மட்டும் 6 ஏவுதல்கள் நடைபெற உள்ளன.
இது குறித்து மத்திய விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: 2025ம் ஆண்டு இஸ்ரோவிற்கு பிசியான மற்றும் முக்கியமான ஆண்டாக இருக்கும். முதல் 6 மாதத்தில் மட்டும் 6 ஏவுதல்கள் நடைபெற உள்ளன. ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
ககன்யான் திட்டத்தின் இறுதிப் பயணத்திற்கு முன்னோடியாக, பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்புவது, உலகின் மிக விலையுயர்ந்த இந்தோ-அமெரிக்கா இணைந்து தயாரித்த நிசார் செயற்கைக்கோள் உள்ளிட்டவை விண்ணில் வெற்றிகரமாக ஏவ ஏற்பாடுகள் நடக்கிறது. என்.வி.எஸ்.,2 செயற்கைக்கோள் ஜனவரியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இது இஸ்ரோவின் 100வது ஏவுதல் ஆகும்.
வியோமித்ரா மிஷன் உட்பட அனைத்து திட்டங்களும் வெற்றியாக நடந்த பிறகு, விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: புதிய ஆண்டில் இஸ்ரோ நான்கு ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மற்றும் மூன்று பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மற்றும் ஒரு எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுவதால் 2025ம் ஆண்டு மிகவும் உற்சாகமான ஆண்டாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.