வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்யும் பா.ஜ.,வின் 'ஆபரேஷன் லோட்டஸ்'; கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

14

புதுடில்லி: தன்னை தோற்கடிப்பதற்காக வாக்காளர் பட்டியலில் பா.ஜ., குளறுபடி செய்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.


70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன.

மேலும், டில்லியில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று ஆம்ஆத்மியும், கெஜ்ரிவால் மீதான ஊழல் புகாரை முன்வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று பா.ஜ.,வும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தான் போட்டியிடும் நியூ டில்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பா.ஜ., குளறுபடி செய்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் போட்டியிடும் நியூ டில்லி சட்டசபை தொகுதியில் டிச.,15ம் தேதி முதல் பா.ஜ.,வினர் ஆபரேசன் லோட்டஸ் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த 15 நாட்களில் 5,000 வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும், 7,500 புதுவாக்காளர்களை சேர்க்கவும் விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் இந்தத் தொகுதியில் சுமார் 12 சதவீத வாக்காளர்கள் மாற்றப்படுகின்றனர். இதுபோன்ற விளையாட்டுக்களை அவர்கள் தேர்தல் என்று கூறுகின்றனர், எனக் கூறினார்.

அதேவேளையில், ஆம்ஆத்மி கட்சியினர் போலி வாக்காளர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்ப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளார்.

"சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களை ஆம்ஆத்மி வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத வாக்காளர்களை நீக்குமாறு நாங்கள் விண்ணப்பித்துள்ளோம். டில்லி தேர்தல் முடிவை சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களை தீர்மானிக்க விட மாட்டோம்," என்றார் பா.ஜ., தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா.

Advertisement